×

கோவையில் ‘ஒட்டக பால் டீ’ பண்ணையில் அதிரடி நடவடிக்கை

சூலூர்:கோவை அருகே கொச்சின் பைபாஸ் சாலையில் ஒட்டக பால் பண்ணை அமைந்துள்ளது. இங்கு ஒட்டக பாலில் டீ போட்டு ஒரு கப் ₹ 50க்கு விற்று வந்தனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பலரும் இந்த ஒட்டக பால் பண்ணைக்கு படையெடுக்க துவங்கினர். இப்பண்ணையில் 2 ஒட்டகங்கள், 2 கழுதைகள் மற்றும் 4 குதிரைகள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இந்த ஒட்டகத்தையும், குதிரைகளையும் பார்ப்பதற்காக பால் பண்ணைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள ஒட்டகங்களை முறையாக பராமரிக்கவில்லை எனவும், ஒட்டகங்களுக்கு நோய் ஏற்பட்டு இருப்பதாகவும், இந்திய விலங்குகள் நல வாரியத்தில் அனுமதி பெறாமல் பண்ணையில் விலங்குகளை வைத்திருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விலங்குகள் நல வாரியத்தில் இருந்து பால் பண்ணைக்கு வந்த அதிகாரிகள் ஒட்டக பால் பண்ணை உரிமையாளர் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மணிகண்டன் ஒட்டகம், குதிரைகளை வளர்க்க முறையாக அனுமதி பெற்றிருப்பதாகவும், ஒட்டகங்களுக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இருப்பினும் அதிகாரிகள் பண்ணையில் இருந்த 2 ஒட்டகங்கள், 2 கழுதைகள், 2 நாய்க்குட்டிகள் மற்றும் 4 குதிரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஒட்டகம், கழுதைகளை சென்னையில் உள்ள பீப்பிள் பார் அனிமல்ஸ் வளாகத்திற்கு கொண்டு சென்றனர். குதிரைகளை மசினகுடியில் உள்ள விலங்குகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post கோவையில் ‘ஒட்டக பால் டீ’ பண்ணையில் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Camel Milk Tea ,Coimbatore ,Cochin ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...